உனக்கென்னப்பா… கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்.. வெயில் அடிச்சா சம்மர் ஹாலிடே… மழை பெஞ்சாலும் ஸ்கூல் லீவு…. இதுபோதாதென்று காலாண்டு, அரையாண்டு லீவு வேற…. இப்படிதான் அரசுப் பள்ளி ஆசிரியர் பணி குறித்த வெகுஜன மக்களின் மதிப்பீடு உள்ளது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதுடன், அவர்களை கட்டிக் காப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது இன்றைய இளம் தலைமுறை பெற்றோரை கேட்டால்தான் தெரியும்.
இப்படி எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு கல்வியறிவை புகட்டும் முக்கிய பணியுடன், விடலைப் பருவ மாணவர்களை நல்வழிப்படுத்தும் தலையாய பணியையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணி போதாதென்று நிர்வாகரீதியான பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய உள்ளது. இதனால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தலுக்கு அவர்கள் தங்களது பணிநேரத்தை முழுமையாக செலவிட முடியாத நிலை இருந்த வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் நிர்வாக பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் எனவும், தேவையான பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக பட்[ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ ஆசிரியர்களின் ஊதிய பிடித்தம் தொடர்பான பதிவேடு, சிறப்பு கட்டண நிலுவை பதிவேடு, கருவூல பதிவேடு, மாணவர்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு அபராதங்கள் தொடர்பான பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்கிவிடலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ‘எண்ணும்- எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் 1-3 ஆம் வகுப்பு மாணவர்களு்ககான பாடக்குறிப்பேடு, 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடக்குறிப்பேடு உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட முக்கிய பதிவேடுகளை மட்டும் ஆசிரியர்கள் பராமரித்தால் போதுமானது. இவற்றையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் கணினி வாயிலாக பராமரித்தால் போதும்’ எனவும் அரசு அறிவி்த்துள்ளது.
ஆசிரியர்களின் நிர்வாகரீதியான பணிச்சுமையை குறைப்பது தொடர்பான இந்த முக்கிய அறிவிப்பு குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.