கொல்கத்தா: வங்கதேசத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து மேற்கு வங்கத்தில் பசுமாடு திருட முயன்ற நபரை கிராம மக்கள் விரட்டி பிடித்து அடித்தே கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக உள்ள வங்கதேசம் மேற்குவங்காளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தில் எல்லைகளை கடந்து வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தி செல்லும் நிகழ்வு காலம் காலமாக நடந்து வருகிறது.
இதனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தி பலரை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் கூட இன்னும் மாடு கடத்தும் நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்நிலையில் தான் மாடு கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து வங்கதேசத்தை சேர்ந்த நபரை மேற்கு வங்க மக்கள் அடித்து கொன்றுள்ள பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
எல்லை கிராமம்
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் ராஜாகஞ்ச் பிளாக் குகூர்ஜான் பகுதியில் பருபாரா கிராமம் உள்ளது. இந்த கிராமமானது இந்தியா-வங்காளதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. எல்லையை கடந்து இந்த கிராமத்துக்குள் நுழையும் வங்காளதேச நபர்கள் அடிக்கடி பசு உள்ளிட்ட கால்நடைகளை திருடி செல்கின்றனர்.
விரட்டிய கிராம மக்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வங்கதேசத்தை சேர்ந்த சில நபர்கள் கிராமத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் பருபாரா கிராமத்தில் உள்ள கால்நடைகளை திருடி செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டினர். கிராம மக்களிடம் இருந்து தப்பிக்க அவர்கள் வேகமாக ஓடி வங்கதேசத்தின் எல்லைக்குள் சென்றனர்.
அடித்தே கொன்ற மக்கள்
இருப்பினும் ஒருவர் மட்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் பதுங்கினார். இதையடுத்து பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். இந்த வேளையில் அந்த நபர் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்து ஓடினார். இதையடுத்து அவரை பிடித்த மக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் துடிதுடித்து இறந்தார்.
3 பேர் கைது- தொடர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவரின் பெயர் முகமது சலாம் என்பதும் அவர் வங்காளதேசத்தின் ராங்கபூர் மண்டலத்தில் உள்ள பஞ்சகார்க் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை அடித்து கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.