திருவனந்தபுரம்: பெருநிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் டாக்ஸி சேவையை ‘கேரள சவாரி’ என்ற பெயரில் மாநில அரசு தொடங்கி உள்ளது.
தற்போது தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 321 ஆட்டோ, 228 கார்கள் தங்களை இணைந்துள்ளன. அதிலும் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் 22 பெண் ஓட்டுநர்களும் உள்ளனர். குறைவான வாடகை, பாதுகாப்பான பயணம் இவை இரண்டும் இத்திட்டத்தின் நோக்கம் எனக் கூறும் கேரள தொழில் துறை அமைச்சர் சிவன்குட்டி, காவல் துறையிடம் இருந்து ஒழுக்கச்சான்று பெற்று வரும் ஓட்டுநர்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும் என்கிறார்.
கேரள சவாரியில் பதிவு செய்து பயணிப்போருக்கு வசதியாக தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இந்த செயலி உள்ளது. அது கூகுளின் தர ஆய்வில் உள்ளதால் சில தினங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும். இதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கேரள தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும், மோட்டார் தொழிலாளர் நல வாரியம், இதை நிர்வகிக்கின்றது.
பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான ‘பீக் ஹவர்ஸில்’ தனியார் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் தொடங்கி, ரத்து செய்யப்பட்ட சவாரிக்கும் முழுக்கட்டணம் வசூல் செய்வது வரை அரசுக்கு பல புகார்கள் வந்ததால் ‘கேரள சவாரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மழை, இரவு என பாரபட்சம் இல்லாமல் எல்லா தருணங்களிலும் கேரள சவாரியில் ஒரேநிலையான கட்டணமே வசூலிக்கப்படும். இதில் சேவை நோக்கம் பிரதானமாகவும், லாப நோக்கம் நியாயமான கட்டணத்தை வசூலிப்பதில் மட்டுமே இருக்கும் என அறிவித்துள்ளது கேரள அரசு. தனியார் வாகனங்களில் 20 முதல் 30 சதவீதம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சூழலில், கேரள சவாரியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேரள சவாரி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்களை இணைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் கட்டண சலுகை, டயர் விலையில் மானியம் என பல சலுகைகளை அரசு வழங்கும்.