புவனேஸ்வர்: பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ட்ரோன்களை அழித்து தாக்கவல்ல ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து சமீபகாலமாக ட்ரோன்கள் மூலமாக அதிக அளவில் அச்சுறுத்தல் வந்துக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கவும், பஞ்சாபில் போதைப்பொருட்களை விநியோகிக்கவும் ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தன. இந்த சூழலில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளத்தில் ட்ரோன்கள் மூலமாக இரண்டு வெடிகுண்டுகளை வீசி பாகிஸ்தான் பயங்கர தாக்குதலை நடத்தியது. இதில் விமானப்படைத் தளம் சேதம் அடைந்த போதிலும், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு விமானப்படை வீரர் மட்டும் காயமடைந்தார். பாகிஸ்தானின் இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தும் புதிய உத்தியை பாகிஸ்தான் கையில் எடுத்திருப்பது இந்தியாவுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன்களை அழிப்பதற்காக ராணுவத்தினருக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, பாகிஸ்தான் மேற்கொண்ட பல ட்ரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
ஏவுகணை சோதனை
இந்நிலையில், ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்காகவே பிரத்யேக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), இந்தியக் கடற்படையும் இணைந்து தயாரித்தன. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட தொலைவில் பறக்கவிடப்பட்ட ட்ரோன்களை இந்த ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் என டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை, ட்ரோன்களை மட்டுமல்லாமல் ஆளில்லா விமானங்களையும் அழிக்கவல்லது ஆகும்.