பாடகர் கே.கே என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கிருஷ்ணகுமார் குன்னத். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனப் பல மொழிகளில் பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’, ‘மன்மதன்’ படத்தில் ‘காதல் வளர்த்தேன்’, எம் குமரன் சன் அஃப் மகாலட்சுமி’ படத்தில் ‘நீயே நீயே’, ‘கில்லி’ படத்தில் ‘அப்படிப் போடு’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் ‘நினைத்து நினைத்து’ என இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
இப்படி தன் பாடல்களால் இந்திய முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கும் கே.கே, கடந்த மே 31-ம் தேதி கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது பிரிவு அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று அவரின் 54வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் அவரது நினைவைப் பகிர்ந்துகொண்டனர்.
அந்த வகையில் அவரைப் பிரிந்து வாடும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பாடகர் கே.கே பற்றிப் பதிவு ஒன்றை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா! இன்று உங்களுக்கு 500 முறை வாழ்த்து தெரிவிப்பதை மிஸ் செய்கிறேன். மேலும் உங்களுடன் சேர்ந்து அதிகாலை எழுவதையும் உங்களுடன் கேக் சாப்பிடுவதையும் ரொம்பவே மிஸ் செய்றேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு நீங்கள் விரும்பும் அளவுக்கு கேக் சாப்பிடுவீர்கள் என்று நம்புகிறேன். கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களை எப்போதும் விட்டு விடமாட்டோம். அம்மா இன்று சோகமாக இருக்கிறாள். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டோம். இன்றிரவு உங்களுக்காக நாங்கள் பாடுவதை நீங்கள் கேட்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.