இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது இந்திய பகிரங்க தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி 11 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்தினால் 4 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 18 ஆம், 19 ஆம் திகதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையிலிருந்து 9 வீர, வீராங்கனைகள் பங்குகொண்டனர்.
இதில் பெண்களுக்கான T47 நீளம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட ஜனனி தனங்ஜனி, 5.01 மீட்டர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான T46 நீளம் பாய்தலில் போட்டியிட்ட குமுது பிரியங்கா 4.71 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டத்தை 13.47 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
பெண்களுக்கான F57 குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட திசரா ஜயசிங்க 5.90 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட சமித்த துலான், 65.27 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான T42 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அனில் பிரசன்ன 12.95 செக்கனில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்ட நிலையில், அதே பிரிவில் போட்டியிட்ட புத்திக இந்திரபால 13.43 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
அதேபோன்று, ஆண்களுக்கான T44 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நுவன் புத்திக 11.77 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் அதே பிரிவிற்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 6.41 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
அத்துடன், ஆண்களுக்கான T47 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சமன் மதுரங்க, போட்டியை 50.55 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.