சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தின் நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (நகர்புறம்) என்றும் கிராமபுறங்களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (கிராமப்புறம்) என்று பிரிக்கப்பட்டு மாநில அரசுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் கிராமப் பகுதிகளில் 52 லட்சம் வீடுகள் மற்றும் நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகள் என இந்த 80 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் நகர்புறங்களில் 122.69 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 102.23 வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 61.50 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 6,91,236 வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 6,25,947 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 4,55,409 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.