பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் முன்னாள் முதுல்வர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து வருகின்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, கடந்த 2005 மற்றும் 2009 வரையிலான காலகட்டத்தில் ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது நிலத்தை பெற்றுக்கொண்டு ரயில்வேயில் வேலை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே 18ம் தேதி லாலு, அவரது மனைவி, மகள்கள் மற்றும் 12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக லாலு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அகமது அஷ்பக் கான், எம்.எல்.சி., சுனில் சிங், முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது.
பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்-க்கு 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.