பெற்ற தாயை கவனிக்காமல் சென்னையில் தவிக்கவிட்ட அமெரிக்க ரிட்டனுக்கு ஆப்பு..! போலீசுக்கு நீதிமன்றம் பாராட்டு

பெற்ற தாயை கவனிக்காமல் அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மகனை விமானநிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். உரிய நடவடிக்கை மேற்கொண்டதாக போலீசாருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துர்காம்பாள். 74 வயதான மூதாட்டியான இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மூத்த மகன் உயிரிழந்துவிட, மற்றொரு மகன் ராமகிருஷ்ணன் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

மகள் திருமணம் முடிந்து அவரது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் அங்கு சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.

வயதான துர்காம்பாள் நோய்வாய்பட்ட தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், அவரது மகள் தான் அவ்வப்போது வந்து அவர்களை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் துர்காம்பாளின் கணவர் கடந்த மாதம் மரணமடைந்தார்.

இறுதி சடங்குகளுக்காக சென்னை வந்த மகன் ராமகிருஷ்ணனிடம் தன்னை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லுமாறு தாய் துர்காம்பாள் கேட்டுள்ளார். ஆனால், இதற்கு ராமகிருஷ்ணன் மறுத்து விடவே, தன்னை காப்பகத்திலாவது சேர்த்து உதவி செய்யுமாறு தாய் துர்காம்பாள் கெஞ்சியுள்ளார்.

ஆனால், இதற்கும் மசியாத அந்த கல்நெஞ்சக்கார மகன் தாயை தனியாக தவிக்கவிட்டு அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார். இதனால், வேறுவழியின்றி தாய் துர்காம்பாள் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணன் மீண்டும் இந்தியா வந்தால் பிடிப்பதற்காக, விமான நிலையங்களுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் சென்னை வந்த ராமகிருஷ்ணனை சந்தித்த தாய் துர்காம்பாள், மகள் வீட்டில் எவ்வளவு நாள் தான் வசிப்பது, தன்னை முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறு மீண்டும் கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கும் செவிமடுக்காத ராமகிருஷ்ணன் மீண்டும் அமெரிக்காவிற்கு புறப்பட, ஏற்கனவே அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசால் ராமகிருஷ்ணனை குடியுரிமை அதிகாரிகள் விமானநிலையத்தில் மடக்கிப்பிடிக்க, ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை 18 வது நீதிமன்றத்தில் மகன் ராமகிருஷ்ணனையும், தாயார் துர்காம்பாளையும் போலீசார் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி தாயார் துர்காம்பாளிடம் அவரது கோரிக்கை குறித்து கேட்டார். இதற்கு தனது மகன் தன்னை காப்பகத்தில் சேர்க்க உதவி செய்தாலே போதுமானது என கண்ணீர் மல்க தாய் துர்காம்பாள் கூறியுள்ளார்.

தாயை தவிக்கவிட்ட தனயன் ராகிருஷ்ணனுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, போதிய உதவிகளை வழங்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவால் 8 லட்சம் ரூபாய் வழங்கியதோடு, காப்பகத்தில் தனது தாயை சேர்த்து பராமரிப்பதாகவும் ராமகிருஷ்ணன் எழுதி கொடுத்துள்ளார். இதன் பின்னரே நீதிபதி, ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

இதுபோன்ற வழக்கில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தாயை கவனிக்காமல் தவிக்கவிட்ட மகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்காக, மைலாப்பூர் போலீசாருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.