பேடிஎம் நிறுவனத்தின் ஒன் டைம் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு நிர்வாகத் தலைவராக மீண்டும் விஜய சேகர் சர்மா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் 22 ஆவது வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த வாரம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் விஜய் சேகர் சர்மாவை தலைவராக தொடர்வதற்கு அனுமதி அளித்துள்ளனர். அந்தப் பதவிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் அவருக்கு ஆதரவாக தலைவர் பதவியில் தொடர்வதற்கு 99.67% வாக்குகள் கிடைக்கப் பெற்றது. இதன் மூலம் அவருக்கு பெருவாரியான முதலீட்டாளர்களின் ஆதரவு உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் பங்கு வெளியீட்டு விலையைவிட கடுமையான சரிவினை சந்தித்துள்ளது. பங்கு வெளியீட்டின் போது பங்கு விலையாக ரூ. 2,160 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது 700 ரூபாய் என்ற அளவில் அந்த நிறுவனப் பங்கு வர்த்தகமாகி வருகிறது. பங்கு வெளியீட்டின் மூலம் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடந்த ஒரு வருடத்தில் 70 சதவீதம் வரை நஷ்டத்தை அடைந்துள்ளனர். இதன் காரணமாக விஜய் சேகர் சர்மாவை மீண்டும் தலைவராக தொடர்வதற்கு முதலீட்டாளர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வி ஏற்பட்டது.
மீண்டும் தலைவராக..!
தற்போது நடந்த வாக்கெடுப்பின் மூலம் மீண்டும் அவர் தலைவராக தொடர்வதற்கு முதலீட்டாளர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளதன் மூலம் இந்தக் இந்தக் கேள்விக்கான விடை கிடைத்துள்ளது.
இந்த வாக்குப்பதிவு வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து நிர்வாகத் தரப்பில் முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு பேடிஎம் நிறுவனத் தலைவரின் மீதும், நிறுவனத்தின் மீதும் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று நிர்வாகத் தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜயசேகர் சர்மாவிற்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு அனுமதி வழங்கும் வாக்கெடுப்பில் அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஆதரித்து 94.48% வாக்குகளே கிடைத்துள்ளன. அவருக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகம் என்று கருதி 5.52% முதலீட்டாளர்கள் வாக்களித்துள்ளனர்.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக விஜய் சேகரின் ஊதியம் மூன்று ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யப் படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பங்கு விலை குறைவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. சென்ற ஆண்டு லாப விகிதம் சற்று குறைந்ததும் பங்கு விலை சரிவுக்கு காரணம் ஆகும். என்றாலும் நிர்வாகத் தரப்பில் நிறுவனத்தை சிறப்பாகக் கொண்டு செல்வதற்கு அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேகர் சர்மா தன்னிடமுள்ள பங்குகளை பங்கு வெளியீட்டு விலையை விட குறைவாக இருக்கும் வரை தான் எப்போதும் விற்கப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
பொதுவாக நிறுவனத்தின் நிர்வாக குழு சார்ந்த நபர்கள் தமது பங்குகளை விற்பனை செய்வது சந்தையின் பார்வையில் தவறாக பார்க்கப்படும். இதற்கு மாறாக விஜய் சேகர் சர்மா தற்போது ரூ. 700 என்ற விலையில் வர்த்தகமாகும் பங்குகளை அதன் பங்கு வெளியீட்டு விலையான ரூ. 2,160 வரை விற்கப்போவதில்லை என்று உறுதி அளித்துள்ளது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
புதிய பங்கு வெளியீட்டின் மீது மக்களுக்கு சென்ற காலங்களில் மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. பங்கு வேலைக்கு விண்ணப்பித்த ஒரு வார காலத்தில் பங்கு பட்டியலிடப்பட்டு கணிசமான லாபத்தை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் பல புதிய பங்கு மூலதன வெளியீட்டில் முதலீடு செய்தனர். ஆனால் பேடிஎம் நிறுவனத்தின் புதிய பங்கு மூலதன வெளியீடு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை மீது கடுமையான நஷ்டத்தை சந்தித்தது.
இதன் காரணமாக அதன் பிறகு வந்த பல புதிய பங்கு வெளியீடுகள் பெரிய அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பேடிஎம் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது உள்ளது. விஜய் சேகர் சர்மாவை அவரது பதவியில் தொடர செய்ததன் மூலம் அந்த நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப விஜய் சேகர் சர்மா தனது பதவி காலத்தில் பேடிஎம் நிறுவனத்தை ஏற்றம் காண செய்வார் என்பதே முதலீட்டாளர்களின் விருப்பமாக உள்ளது.