சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வா (29) கத்தியால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் ஆசிர்வா. இவர் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அப்பெட்டியில் மதுபோதையில் ஆணொருவர் ஏறியிருந்திருக்கிறார். இதை பெண் காவலர் ஆசிர்வா கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து ஆசிர்வாவின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியிருக்கிறார்.
இதில் படுகாயம் அடைந்த அவர், அங்கிருந்த பிறரால் மீட்கப்பட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவலரை கத்தியால் குத்திய நபரை ரயில்வே போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கஞ்சா புகைக்கும் ஆசாமிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், மொழி தெரியாத காவலர்களை பணியமர்த்துவதாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM