திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல், தண்டவாளத்தில் தலைவைத்து தி.க நகர தலைவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டு உயிரை மாய்த்தவருக்கு வீரவணக்கம் போஸ்டர் ஒட்டப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி சம்பவத்தன்று காலை கூட்ஸ் ரயில் சென்றது திருவெறும்பூர் அருகே உள்ள குமரேசபுரம் அருகே வந்தது. அப்போது தூரத்தில் மர்ம நபர் ஒருவர் ஓடி வந்து தண்டவாளத்தில் தலையை வைத்து படுப்பதை கண்டுள்ளார்.
கூட்ஸ் ரயில் டிரைவர் ஹாரன் மூலம் எவ்வளவோ சத்தமிட்டு முன் எச்சரிக்கை செய்தும், அந்த நபர் தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. செய்வதறியாது திகைத்த ஓட்டுனர் ரெயிலின் வேகத்தை குறைத்து நிறுத்த முயன்றுள்ளார் இருந்தாலும் ரெயில் நிற்காமல் சென்றதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பலியானார்.
அந்த கூட்ஸ் ரயில் சிறிது தூரம் தூரம் தள்ளி போய் நின்றது. அந்த நபரின் சடலம் ரெயில் தண்டவாளங்களுக்கிடையே கிடந்தது. சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உடனடியாக பொன்மலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த பொன்மலை ரயில்வே போலீசார் அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்துக் கொண்டவர் திருவெறும்பூர் கணேஷா பஞ்சர் கடை உரிமையாளரும், திராவிடர் கழக நகர தலைவருமான சுரேஷ் என்பது தெரியவந்தது.
சுரேஷுக்கு சாந்தி என்ற மனைவியும், இருமகன்களும் உள்ள நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி பல்வேறு செலவுகளை செய்து வந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க இயலாத நிலையில், புதிதாக கடன் கொடுக்க நண்பர்களோ, உறவினர்களோ, கட்சியினரோ எவரும் முன்வராததால் ‘என்னை மன்னித்து விடு, குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்’ என்று வீடியோ வெளியிட்டு விபரீதமான முறையில் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
திருவெறும்பூர் ரெயில் நிலைய நடை மேடையில் உள்ள இருக்கையில் ரெயிலுக்காக காத்திருந்த சுரேஷ், தான் அமர்ந்திருந்த இருக்கையில் தனது பர்ஸ், செல்போன், வாட்ச், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வைத்துவிட்டு ரெயில் வரும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடன் தொல்லையால் சுரேஷ் உயிரை மாய்த்தது, தெரிந்திருந்தாலும் தங்களது செயலாளர் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் என்று சுவரொட்டி அச்சடித்து ஒட்டி உள்ளனர்.