புதுடெல்லி: பழம்பெருமை வாய்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவுக்கு மீண்டும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை காக்க உதவிகோரி தமிழக அரசுக்கு அத்துறையின் சார்பில் ஜெர்மனியிலிருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கடந்த 1963 முதல் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ் பிரிவும் செயல்பட்டு வருகிறது. இதை, தமிழால் ஈர்க்கப்பட்டு, தமிழ்பயின்று, அறிஞரான க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் எனும் ஜெர்மனியர் நிறுவினார். இதில், ஆய்வுக்கான வகையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் உள்ளன.
இந்த தமிழ் பிரிவுக்கு முதன்முறையாக 2018-ல் ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக 2020-ல் இதை மூடும் அபாயம் உருவானது.
அமெரிக்கவாழ் இந்தியர்களால் திரட்டப்பட்ட பாதி நிதியால் மூடும் முடிவு, 2022 ஜூன் வரை தள்ளிப்போனது. மீதம் உள்ள பாதித்தொகையான ரூ.1.25 கோடியை அளிப்பதாக, கடந்த ஆட்சியின் தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பால் இந்த நிதியை அதிமுக அரசால் அளிக்க முடியவில்லை.
இப்பிரச்சினை கடந்த 2021, ஜுலை 7-ல் ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகி கவனம் ஈர்த்ததை தொடர்ந்து, புதிய ஆட்சியின் முதல்வரான மு.க.ஸ்டாலின், செய்தி வெளியான அதே நாளில் ரூ.1.25 கோடியை அனுப்பி வைத்தார். தற்போது மீண்டும் மூடும் அபாயம் கொலோனின் தமிழ் பிரிவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலோனின் தமிழ்ப் பிரிவை காக்க, அதன் உதவிப் பேராசிரியரான ஸ்வென் வொர்ட்மான் சமீபத்தில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2021, ஜுலை 7-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த தமிழக அரசின் நிதியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக 2023 மார்ச் 31 வரை தமிழ் பிரிவை காத்து தொடர உதவியதாக முதல்வருக்கு நன்றிதெரிவித்துள்ளார்.
தமிழ் பிரிவின் நிலைத்தன்மைதொடர நிதியுதவி தேவைப்படுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியர் ஸ்வென், மேலும் ஒரு வருடத்துக்கான நிதி அளித்து தமிழக அரசு உதவும்படி கோரியுள்ளார்.
கொலோனின் தமிழ் பிரிவின் சிக்கல்களை தீர்க்க ஜெர்மனியின் ‘ஐரோப்பா தமிழர் கூட்டமைப்பு’, அமெரிக்காவின் ‘தமிழ் சேர் இன்க்’ ஆகிய தமிழ் அமைப்புகளும் முன்வந்தன. இவற்றின் சார்பில் நிதியாக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொலோனின் தமிழ் பிரிவுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சிக்கலை தீர்க்க, இப்பல்கலைக்கழகத்தின் இதர துறைகளுடன் இணைந்து தமிழையும் அடிப்படையாக்கி, ஓர்ஆய்வு நிறுவனத்தை அமைக்கஇப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் திட்டமிடுகின்றனர்.
முறையாக நிர்வகிக்கவில்லை
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஜெர்மனிவாழ் தமிழர்கள் வட்டாரங்கள் கூறும்போது, “இதுவரை இல்லாத வகையில் கொலோனின் தமிழ் பிரிவு சிக்கலுக்கு உள்ளாக, அதை முறையாக நிர்வகிக்காதது தான் காரணம். இதற்கு தமிழக அரசு மீண்டும் உதவுவதுடன் தனது சார்பில் ஒருவரை இங்கு நியமித்து தமிழ் பிரிவின் நிர்வாகத்திலும் பங்குகொண்டால் தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். இதை செய்யத் தவறினால், கொலோனின் பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் அழியும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தன.
இதுபோல், ஜெர்மனியில் பல்வேறு நகரங்களின் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பிரிவுகள் உள்ளன. இவை ஹேம்பர்க், ஹைடில்பர்க், பொக்கும் ஆகியனவாகும்.
இவற்றுக்கு நிதி உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சிறந்தமுறையில் தொடர்கின்றன. எனவே, இந்தமுறை அப்பல்கலைக்கழத்துடன் ஓர் உடன்படிக்கை செய்து தமிழக அரசு கொலோனுக்கு நிதியுதவி அளித்து அதன் தமிழ் பிரிவை காப்பது அவசியம்.
சென்னையில் நேற்று முன்தினம் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி தமிழுக்கான இருக்கைகளை தெற்காசியாவின் 5 நாடுகளில் அமைப்பதுடன் இவற்றை, கொலோனிலும் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனம் சார்பில் அமைப்பதும் பேருதவியாக அமையும்.