முக்கிய பதவிகளில் இந்தியர்கள்அமெரிக்காவில் புதிய சாதனை| Dinamalar

வாஷிங்டன்-அமெரிக்காவில், துணை அதிபர் முதல் மிக முக்கிய பதவிகளை, 130க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர்.

இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அரசில் முக்கிய பதவிகள் வழங்கப்படுகின்றன. ரொனால்டு ரீகன், 1981 – 1989ல் அதிபராக இருந்தபோது, முதல் முறையாக, இந்தியர் ஒருவர் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டார்.பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, 60 இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. அவரைத் தொடர்ந்து, டொனால்டு டிரம்ப் பதவியேற்றபோது, 80க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்.கடந்த, 2021ல் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் நிர்வாகத்தில், 130க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிக்கின்றனர்.’இன்டியாஸ்போரா’ என்ற அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான அமைப்பு, அமெரிக்காவில் முக்கிய பதவிகளில் உள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளது.

அதன்படி, துணை அதிபர் கமலா ஹாரிசில் துவங்கி, அமெரிக்க நிர்வாகத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் இந்தியர்கள் உள்ளனர்.”இது, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்,” என, பிரபல தொழிலதிபரும், இன்டியாஸ்போரா அமைப்பின் தலைவருமான எம்.ஆர்.ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், மக்கள் பிரதிநிதிகள் சபையில், நான்கு இந்தியர்கள் உட்பட மாகாண, பிராந்திய அரசுகளில், 40 இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். இதைத் தவிர, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா உட்பட, 20க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.