போபால்: ஆற்றின் தடுப்புச் சுவர் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கீழே விழுந்த இளைஞரை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.
நாட்டில் உள்ள இளைஞர்களை செல்ஃபி மோகம் ஆட்டிப் படைத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே சென்றாலே செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது இன்றைய தலைமுறையினரின் வாடிக்கையாகி விட்டது. பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கப்படும் இந்த செல்ஃபி பழக்கம், பல நேரங்களில் பெரும் ஆபத்தையும் விளைவித்து விடுகின்றன. ரயிலுக்கு முன் நின்று செல்ஃபி எடுப்பது, மலை முகட்டில் நின்று செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளைஞர்கள் உயிரிழப்பது அன்றாட செய்திகளாக மாறிவிட்டன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் லைக்ஸ்களுக்காக உயிரை விட்ட இளைஞர்கள் ஏராளம்.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது. மத்திய பிரதேசத்தின் மாண்டசோர் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. அங்கு பாயும் சம்பல் நதியை பார்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் இங்கு வருவர். அந்த வகையில், நேற்று இந்த ஆற்றையும், அருகில் உள்ள காந்தி சாகர் அணையையும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், காந்தி சாகர் அணையின் தடுப்புச் சுவர் மீது ஏறினார். அவரை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் இறங்குமாறு கூக்குரலிட்டனர். ஆனால் அதை சட்டை செய்யாத அவர், சுவற்றில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றார். இதில் திடீரென கால் இடறி அவர் ஆற்றுக்குள் விழுந்தார். பின்னர் நீச்சலடித்து கரைக்கு வருவதற்குள் அவரை அங்கிருந்த முதலை ஒன்று கடித்து குதறி இழுத்துச் சென்றது. பின்னர் அவரை அந்த முதலை சிறிது சிறிதாக சாப்பிட்டது. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறினர்.
அந்த இளைஞர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். செல்ஃபி மோகத்தால் இளைஞர் முதலையிடம் சிக்கி உயிர்விட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.