2015-ம் ஆண்டு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம், குறிப்பிட்ட சில நகரங்களைத் தேர்வுசெய்து, அதில் உலகத்தரத்துக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுதான் திட்டத்தின் நோக்கம். அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தேர்வுசெய்யப்பட்டன. மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதி தொகையை ஒதுக்கி பணிகளும் நடந்துவருகின்றன.
இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு முதல் சென்னையில் மழை கொட்டித்தீர்த்தது. மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய தி.நகர் பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், சாலையெங்கும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைப் பார்த்து, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை ஒழுங்காக முடிக்காமல் ஊழல் செய்திருக்கிறார் வேலுமணி’ என்று வெளிப்படையாக பேட்டியளித்தார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளில் முறைகேடுகள் அரங்கேறினவா? என்பது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் கமிஷனை மார்ச் மாதம் அமைத்தார் ஸ்டாலின். 11 நகரங்களுக்கும் நேரில் சென்று ஆய்வுசெய்த டேவிதார், தனது 200 பக்க அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பவைக் குறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். “மத்திய அரசு மீது எந்தவிதக் குற்றச்சாட்டும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. மாநில அரசும், மத்திய அரசும் ஒதுக்கிய நிதியைச் சரியாக செலவுசெய்யவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டிக்கு பயனில்லாத இடங்களைத் தேர்வுசெய்து அங்கு தேவையின்றி செலவுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், ஒதுக்கப்பட்ட நிதிக்கும், நடந்த பணிகளுக்கும் இடையே பலநூறு கோடிகள் இடைவெளி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
உதாரணத்துக்கு, திருச்சியில் சுமார் 261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு, தில்லை நகரில் பல்நோக்குக் கட்டடம் என ஒருசிலப் பணிகள் மட்டுமே நடந்திருக்கிறது. பெரும் தொகை இதில் அடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அறிக்கை கிளப்புகிறது. இதுபோன்று, இன்னும் சில இடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அச்சமயம், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது நேரடியாக புகார்கள் கூறப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்போதைய முதல்வர் எடப்பாடி மீது நேரடியாக எந்தப் புகாரும் இல்லை என்கிறபோதும், முதலமைச்சராக சரியாக திட்டத்தை கவனிக்கவில்லை என்கிற ரீதியில் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே, லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கியிருக்கும் வேலுமணிக்கு, இந்த கமிஷன் அறிக்கை மேலும் தலைவலியைக் கொடுக்கும் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள். வெறும் குற்றச்சாட்டாக மட்டும் இல்லாமல், முறைகேடுகள் நடைபெற்ற விதம் பற்றியும் தெளிவாக அறிக்கையில் இருக்கிறதாம்.
வேலுமணிக்கு அப்போது உதவி புரிந்த அதிகாரிகள் குறித்தத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியில் தற்போது முக்கியப் பொறுப்பில் ஒரு நபரும் இதில் சிக்குகிறாராம்!” என்றனர்.