புதுடெல்லி: பல தொழில் அதிபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் சுகேஷ் சந்திர சேகர். மோசடி பணத்தில் தனக்கு நெருக்கமான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு குதிரை உட்பட ரூ.5 கோடிக்கு மேல் பரிசுப் பொருட்களை அளித்துள்ளார். இதனால் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது.
சுகேஷ் சந்திர சேகர் டெல்லி ரோஹினி சிறையில் இருந்தபோது, சிறை அதிகாரிகள் மாதம் ரூ. 1.5 கோடி லஞ்சம் பெற்று வந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 81 அதிகாரிகள் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது மனைவி லீனா மரியா பால் ஆகியோர் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
திகார் சிறை வளாகத்தில் தனக்கும், தனது மனைவியின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இதனால் டெல்லிக்கு வெளியே வேறு ஏதாவது சிறைக்கு தங்களை மாற்றக்கோரி சுகேஷ் சந்திர சேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஆர் பட், சுதன்சு துலியா ஆகியோர் மனுதாரர்கள் சுகேஷ் சந்திர சேகர் மற்றும் அவரது மனைவியை ஒரு வாரத்துக்குள் டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர்.