ரசிகர்களைத் தேடிச் செல்லும் நடிகர்கள்
கொரோனா தாக்கம் கடந்த இரண்டு வருடங்களாகப் பல்வேறு துறைகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்னமும் அதிலிருந்து முழுமையாக விடுபட முடியாமல் தவித்து வருகிறோம். சினிமாவைப் பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டது.
கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்கள் அபரிமிதான வளர்ச்சியை அடைந்துள்ளன. அதனால், தியேட்டர்கள் பக்கம் வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைவாகிவிட்டது என்றார்கள். ஆனால், முன்னணி நடிகர்கள், முக்கிய நடிகர்கள், நல்ல படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் வருகிறார்கள். அவர்களை வரவழைக்க முன்னணி நடிகர்களே இறங்கிப் போக வேண்டியதாகிவிட்டது என்பது உண்மை.
'விக்ரம்' படத்திற்காக கமல்ஹாசன் தனி ஒருவராக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சுற்றி வந்தார். படம் தென்னிந்திய அளவில் லாபகரமான படமாக அமைந்தது. அடுத்து சூர்யா தயாரிக்க, அவரது தம்பி கார்த்தி கதாநாயகான நடித்த 'விருமன்' பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தற்போது விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள 'கோப்ரா' படத்திற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய ஊர்களுக்கு விக்ரம், படத்தின் கதாநாயகிகள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர்.
தெலுங்கில்தான் அனைத்து முன்னணி நடிகர்களும் அவர்களது படங்களுக்காக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல ஊர்களுக்கு 'ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்' என சுற்றிச் சுற்றி பிரமோஷன் செய்வார்கள். அந்தக் கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவிலும் பரவி வருகிறது. இவை படத்தின் வரவேற்பிற்கு உதவியாக இருக்கும் என அந்தந்த ஊர் தியேட்டர்காரர்கள் மகிழ்கிறார்கள். விஜய், அஜித் படங்கள் வெளிவரும் போது அவர்களும் இப்படி ஊர் ஊராகப் போனால் 100 கோடி, 200 கோடி வசூல் அதற்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.