சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராமாரியாக கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவலர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வருகிறார் ஆசிர்வா. 29 வயதான ஆசிர்வா வட மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று (2022 ஆகஸ்ட் 23) இரவு ஆசிர்வா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில் போதை ஆசாமி ஒருவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதை கண்டித்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஆசிர்வாவை, போதை ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண் காவலர் ஆசிர்வாவை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில் ஏறி, பெண் காவலரை கத்தியால் குத்திய ஆசாமியை ரயில்வே போலீசார் தேடி வருகிறார்கள், இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கஞ்சா புகைக்கும் ஆசாமிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், மொழி தெரியாத காவலர்களை பணியமர்த்தப்படுவதும் நிலைமையை மோசமாக்குவதாக பலரும் கூறுகின்றனர். இளம் பெண்களைப் பார்த்தால், அவர்கள் போலீசாக இருந்தாலும், வேண்டும் என்றே சீண்டும் ரவுடிகள் இந்தப் பகுதியில் அதிகமாக சுற்றுகின்றனர்; அதனால்தான் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இரவு நேரங்களில் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தக் கூடாது என பயணிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்