புதுடில்லி : பா.ஜ.,வின் மூத்த தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ., உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ரஷ்யா செல்கிறது.
ரஷ்யாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரை, அந்நாட்டின் உளவு அமைப்பான, எப்.எஸ்.பி., எனப்படும், ‘பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ்’ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். கைதான நபர், மத்திய ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அஸாமோவ் மஷான் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் முஸ்லிம் மதம் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய, அவர் அனுப்பி வைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார்.
மேற்காசிய நாடான துருக்கியில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்பட்டு, ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், சில ஆவணங்களை தயார் செய்து இந்தியா பயணிக்க திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல்களை, ரஷ்யாவின் எப்.எஸ்.பி., அதிகாரிகள் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து, என்.எஸ்.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் உயர் அதிகாரிகளின் கூட்டுக் குழு ரஷ்யா செல்ல இருக்கிறது. ஐ.எஸ்., பயங்கரவாதி அஸாமோவ் கைது குறித்து விரிவான விசாரணை நடத்தவும், ரஷ்ய உளவுத் துறையிடம் கூடுதல் தகவல்களை சேகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement