ரோடு போடுவதற்காக தன் திருமண சேமிப்பை செலவிட்ட ஐ.டி. ஊழியர்!

திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் தன் சொந்த ஊருக்கு தனியார் நிறுவன ஊழியர் சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்து தென்கோடிப்பாக்கம் கிராமத்தின் அருகில் உள்ளது நல்லாவூர். இந்த கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவர் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தான் வசிக்கும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக இருந்துள்ளது.
image
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தான் சம்பாதித்து திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் பணத்தில் 280 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்துள்ளார். சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஊரில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சிமெண்ட் சாலை அமைத்துள்ளார் சந்திரசேகரன்.
தான் சம்பாதித்து திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் சொந்த ஊருக்கு சாலை அமைத்திருக்கிறார் சந்திரசேகரன். தான் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சாலை அமைக்காததால் தன் சொந்த செலவில் சாலை அமைத்ததாக கூறுகிறார் சந்திரசேகரன். சந்திரசேகரன் இந்த சாலை அமைத்தது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார் அதே ஊரைச் சேர்ந்த ருத்ரா. எனக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகளாகிறது அப்போதிலிருந்து இந்த சாலை மோசமாகத்தான் இருந்து வந்தது. தற்போது தான் சரியானது என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.