வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்த போது, பணி நியமனங்களில் நிலங்களை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கு தொடர்பாக, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி எம்.பி., மற்றும் எம்.எல்.சி., வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இக்கட்சி ஆதரவுடன், ஆட்சியமைத்துள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்று (ஆக.,24) நம்பிக்கை ஓட்டெடுப்பு கோர உள்ள நிலையில் இந்த சோதனை நடந்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், 2004 – 09 காலகட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அத்துறையில் பணி நியமனங்கள் செய்ததில், 1 லட்சம் சதுர அடி அளவுக்கு நிலங்களை லஞ்சமாக பெற்றதாக, லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக லாலு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அக்கட்சியின் 2 பேர் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., அகமது அஷ்பக் கான், எம்.எல்.சி., சுனில் சிங், முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக சுனில் சிங் கூறுகையில், ” இந்த சோதனை வேண்டுமென்றே நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் பயந்து தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் சோதனை நடத்தப்படுகிறது எனக்கூறியுள்ளார்.
ஆர்ஜேடி எம்.பி., மனோஜ் ஜா கூறுகையில், இதனை அமலாக்கத்துறை, ஐடி அல்லது சிபிஐ சோதனை எனக்கூறுவதை விட பா.ஜ.,வின் சோதனை எனக்கூறுவேன். தற்போது, இந்த அமைப்புகள் பாஜ.,கீழ் செயல்படுகின்றன. பா.ஜ.,வின் விருப்பப்படி அக்கட்சி அமைப்புகள் செயல்படுகின்றன. இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், இங்கு என்ன நடக்கிறது.
இது முன்கூட்டியே எதிர்பார்த்தது தான். இது நடக்கும் என தேஜஸ்வி யாதவ் நேற்றே கூறினார். ஆனால், 24 மணி நேரத்தில் நடக்கும் என நினைக்கவில்லை. இந்தளவுக்கு அவர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் விருப்பப்படி ஆட்சி நடக்காதது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நலனுக்காக கூட்டணி மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement