அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக போலீசாரின் விசாரணை முடியும் வரை தொண்டர்கள் யாரும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தைப் பார்வையிட செல்ல வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையை முடித்த பிறகு, சேதமடைந்த பொருட்கள், கதவுகள் சரிசெய்யப்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அத்துடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டார்.
தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவர் கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக தொண்டர்கள் யாரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லவில்லை.
இந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணையை காவல்துறை விசாரித்து முடிக்கும் வரை கட்சி தலைமையகத்திற்குச் தொண்டர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல கோரிக்கைகள் இருந்தபோதிலும், போலீசார் விசாரணையை விரைவுபடுத்தவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுக தலைமை அலுவலகத்திற்குள், பல அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் தங்கள் விசாரணையை முடித்த பின்னர், சேதமடைந்த பொருட்களும், கதவுகளும் பழுதுபார்க்கப்பட்டு அதிமுக தலைமை அலுவலகம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தை ஆடி மாதம் முடிந்த பின்னர் சரிசெய்யும் திட்டங்கள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், தொடர்ச்சியான வழக்குகளும் சேதமடைந்த பொருட்கள் மற்றும் கதவுகளை சரிசெய்யும் பணி தொடங்குவதற்கு தாமதமாக காரணம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”