விஜயகாந்த் கஷ்டப்படுத்தப்படுகிறாரா? – பிரேமலதா புதிய விளக்கம்

சென்னை: “தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார். அவரை கஷ்டப்படுத்துவதாக யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்” என்று அக்கட்சியின் பொருளாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: “விஜயகாந்த் நலமுடன் உள்ளார். நீங்கள் அனைவரும் ஆக.15-ம் தேதியன்று கொடியேற்றும்போது பார்த்தீர்கள். 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும், அதற்காக நான் தலைமைக் கழகத்திற்கு வருகிறேன் என்று கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார். அதனால்தான் அன்று தலைவர் அழைத்துவரப்பட்டார். அவரது கையால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இன்றும், நாளையும் உங்கள் அத்தனை பேரையும் சந்திக்க வேண்டும் என்றுதான் தலைவர் விஜயகாந்த் விரும்புகிறார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், அவர் நன்றாக இருக்கிறார், உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். நீங்களும் தலைவரை சந்திக்க முடியுமா, முடியுமா என்றுதான் பலரும் கேட்கிறீர்கள்.

உங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகத்தான் தலைவர் விஜயகாந்தை அழைத்து வருகிறோம். ஆனால், இன்றைக்கு பலபேர் அதனை திரித்து ஏன் அவரை கஷ்டபடுத்துகின்றனர்? எதற்காக அழைத்து வருகின்றனர்? என்று அதை ஒரு தவறான பிம்பத்துக்கு தயவுசெய்து யாரும் கொண்டு செல்ல வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமாக இருப்பார்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.