தொடர் விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சுதந்திர தினத்தையொட்டி அளிக்கப்பட்ட விடுமுறையின்போது ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து திடீர் சோதனை நடத்திய போக்குவரத்துத் துறைஅதிகாரிகள், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகாரளித்த 97 பேரிடம், அந்தந்த இடத்திலேயே உரிமையாளர்கள் மூலம் கூடுதல் கட்டணத்தைத் திருப்பி வழங்க வைத்தனர்.
மும்மடங்கு கட்டணம்
இதேபோல் கடந்த 19-ம் தேதிகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை ஒட்டி பெரும்பாலானோருக்கு ஆக.19, 20, 21 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, 18-ம் தேதி முதலே ஆம்னி பேருந்துகளில் மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து திடீர் சோதனை நடத்தி பயணிகள் பாதிக்கப்படாதவாறு பேருந்து சேவை கிடைப்பதை உறுதி செய்யுமாறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து ஆக.18-ம்தேதி இரவு முதல் 22-ம் தேதிகாலை வரை ஆம்னி பேருந்துகளில்திடீர் சோதனை நடத்தப்பட்டது.
வரிகளும் வசூலிக்கப்பட்டன
இச்சோதனையின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துபோக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறும்போது, “விதிகளை மீறி இயக்கப்பட்ட ஒரு ஆம்னி பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. 596 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன. அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறலுக்காக ரூ.5.06 லட்சம் அபராதம் மற்றும் ரூ.4.10 லட்சம் வரி விதிக்கப்பட்டது.
இதேபோல் விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.9.65 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதோடு, பல்வேறு இனங்களில் செலுத்தப்பட வேண்டிய ரூ.4.62 லட்சம் வரியும் வசூலிக்கப்பட்டது” என்றனர்.