தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம்பேசுதடி படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த அவர், தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசமான கதைக்களத்தை அமைத்து அதனை வணிகரீதியாகவும் வெற்றி பெற வைத்தவர். மிஷ்கினின் கதைக்களத்தை ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படம் பெரும் வெற்றியை பெற்றது. நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஆண்டிரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே டிரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சில காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதனை இயக்குநர் மிஷ்கின் மற்றும் ஆண்டிரியா ஆகியோர் பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்த நிலையில், சென்சாரில் அந்தக் காட்சிகள் தூக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகள் தூக்கப்பட்டதாக இயக்குநர் மிஷ்கின் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
பேட்டி ஒன்றில் விமர்சகர்களை தற்குறிகள் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள இயக்குநர் மிஷ்கின், ” என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள். இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன். விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.