புதுடெல்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் நாட்டின் விமானப் பயணிகள் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் கூறியதாவது:
உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில்உள்ளன. இதையடுத்து, அடுத்த5 ஆண்டுகளில் விமான நிறுவனங்கள் 1,200 விமானங்களை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனாவுக்கு முன்பாக நமது விமான சேவை நிறுவனங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடு என ஆண்டுக்கு 20 கோடி விமானப் பயணிகளை கையாண்டு சாதனை படைத்தன. இந்த எண்ணிக்கை அடுத்த 7-10 ஆண்டுகளில் இரண்டு மடங்காகி 40 கோடியாக அதிகரிக்கும்.
மேலும், வரும் 2026-ம் ஆண்டு ஹெலிகாப்டர் இறங்கு தளம் உட்பட மொத்தம் 220 விமான நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை தற்போது கரோனோ பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.