வேதாரண்யம் பகுதியில் பெய்த மழையால் உப்பளத்தில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதியில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் மூவாயிரம் ஏக்கரில் மட்டும் சாப்பாட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவியதால் உப்பு உற்பத்தி தடையின்றி நடைபெற்று வந்தது.
இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக இரவில் மட்டும் தொடர்ந்து பெய்த மழையால் வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுவதும் நீரில் முழ்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட உப்பு மழையில் சேதமடையாமல் இருக்க பிளாஸ்டிக் பாய்களை கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி பாதிப்பால் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட உப்பள பாத்திகள் சீரமைக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகு தான் உப்பு உற்பத்தி செய்ய முடியும். தாமதமாக தொடங்கப்பட்டதால் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு இருபதாயிரம் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதனால் ஒரு டன் உப்பு ரூ 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM