பிரேசிலியா: பிரேசிலுக்கு சுதந்திரம் வழங்கிய போர்த்துக்கீசியர்களின் நினைவாக அந்நாட்டு மன்னரின் இதயம் ஒன்று தற்போது பிரேசிலுக்கு வந்துள்ளது.
போர்த்துக்கீசிய மன்னர் முதலாம் டோம் பெட்ரோ சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கட்டுப்பாட்டிலிருந்து பிரேசிலை விடுவித்தார்.
செப்டம்பர் 7 பிரேசிலில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மன்னர் டோம் பெட்ரோவின் இதயத்தை ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.
உலகின் 5வது பெரிய நாடான பிரேசில், தென் அமெரிக்கா நாடுகளில் மிகப்பெரிய நாடாகும். ஆண்டுதோறும் செப்.7ம் தேதி இந்நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொண்டாட்டாட்டங்களை சிறப்பிக்கும் வகையில், பிரேசிலை சுதந்திர நாடாக அறிவித்த போர்த்துக்கீசிய மன்னர் முதலாம் டோம் பெட்ரோவின் இதயம் தற்போது பிரேசிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மன்னர் டோம் பெட்ரோவின் இதயத்தை ராணுவ மரியாதையுடன் பெற்றுக் கொண்டார்.
1800 காலகட்டம் போர்த்துக்கீசியர்களுக்கும், நெப்போலியன் மன்னனுக்கும் இடையே கடும் சண்டை மூண்டிருந்த காலமாகும். இந்த மோதலில் போர்த்துக்கீசியப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்த பின்னர், 1821ல் அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். இதன் பின்னர் இளவரசர் பெட்ரோ டி அல்கந்தாரா பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக பதவியேற்றார். ஆனால் அந்நாட்டு மக்கள் விடுதலை கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து 1820ல் மிகப்பெரிய அளவில் விடுதலைக்கான புரட்சி வெடித்தது. இதற்கு பின்னரும் இந்நாட்டு மக்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது என்பது சவாலான விஷயம் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். ஆனால் மறுபுறம் போர்த்துக்கீசிய அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. எனவே மோதல் முற்றியது. இதனையடுத்து 1822 செப். 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துகல் விடுவிப்பதாக அறிவித்தது.
உலகம் முழுவதும் உள்ள வளங்களில் கணிசமான அளவு பிரேசிலில் உள்ளது. இங்கு இல்லாத வளங்களே இல்லை என்று சொல்லலாம். வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடு விடுதலையடைந்தாலும் தற்போதுவரை போர்த்துக்கீசிய பாரம்பரியத்தையும் மொழியையும் இன்று வரை அது இழக்கவே இல்லை. 1834ல் தனது 35வது வயதில் முதலாம் டோம் பெட்ரோ இறந்ததிலிருந்து போர்ச்சுக்கல் நகரமான போர்டோவில் ஒரு கலசத்தில் அவரது இதயம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த இதயமானது பிரேசிலில் 3 வாரங்களுக்கு வைக்கப்பட உள்ளது .