2016-ல் அமல்படுத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத் திருத்ததை அமல்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ஏற்படுத்திய சில திருத்தங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் பல திருத்தங்களுடன் கடந்த 2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 1 தேதி முதல் சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு வந்த திருத்தச்  சட்டத்தை முந்தைய பரிவர்தனைகளுக்கு அமல்படுத்த முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஒன்றிய அரசு திருத்தச்  சட்டத்தை பின் தேதியிட்டு அமல்படுத்துவதில் தவறு இல்லை என்று வாதிட்டது. பினாமி பரிவர்த்தனை சட்டத்திற்கு எதிரானது என்பதால் நடைமுறையில் உள்ள சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்தலாம் என்றும் ஒன்றிய அரசு கூறியது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை உள்ளடக்கிய 3 நீதிபதிகள் அமர்வு பினாமி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்த அரசு மற்றும் சட்ட ஆணையம் எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

1988-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் பிரிவுகள் 3, 5-ஐ பொறுத்தவரை, காகித அளவிலேயே இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்பு கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த சட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பிரிவு 3, உட்பிரிவு 2 ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் கூறியுள்ளனர். எனவே, 2016 அக்டோபர் 25 தேதிக்கு முன்னதாக நடந்த பரிவர்த்தனைகளுக்கான குற்றம் மற்றும் பறிமுதல்  நடவடிக்கைகளை புதிய திருத்தச்  சட்டத்தின்படி எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக தீர்பளித்துள்ள உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.