ஹைதராபாத்: வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஆந்திர பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 175 பேரவை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இத்தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், பாஜக, ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து களத்தில் இறங்க உள்ளன. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன், ஜூலை முதல் வாரத்தில் ஆந்திராவில் பரவலாக கருத்துக்கணிப்பு நடத்தினோம். இதன்படி ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் (டிடிபி), ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால், இந்தக் கூட்டணிக்கு 93 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். மீதமுள்ள தொகுதிகள், இழுபறி தொகுதிகள் என கணக்கிட்டால், மொத்தம் 127 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெறும்.
ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என 8 முதல் 10 தொகுதிகளை மட்டுமே குறிப்பிட முடியும். ஆங்கில தொலைக்காட்சி சேனலில் காட்டப்படும் கருத்துக்கணிப்புகளை ஆதாரமாகக் கொண்டு தெலுங்கு தேசம் கட்சி தங்களது வெற்றியை உறுதி செய்துகொண்டு, அலட்சியமாக இருந்தால் தொகுதிகளை இழக்கவும் நேரிடும். ஆதலால் அலட்சியப் போக்கை கைவிட்டு, தெலுங்கு தேசம் கட்சியினர் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.