சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து இயக்க பிரமுகர்கள் 89 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, கடந்த மே மாதம் முகமது நபி குறித்து கூறியகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், “அவதூறாக பேசியதற்கு பழிவாங்குவோம்.இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படை தீவிரவாதியை ரஷ்ய போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்பு தலைவர்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய உளவுத் துறை மாநில காவல் துறைக்கு அறிவுறுத்தியது.
இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டியும், தீவிரவாத அமைப்பின் மிரட்டல் காரணமாகவும் இந்து அமைப்பு தலைவர்களின் பாதுகாப்பில் போலீஸார் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அகில இந்திய இந்து சத்திய சேனா தலைவர் வசந்தகுமார் ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கும், பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.
89 பேருக்கு பாதுகாப்பு
இதுமட்டுமின்றி, தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள் என 89 பேருக்கு நேற்று முன்தினம் முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடியும்வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்று கூறப்படுகிறது.