சமீபத்தில்தான் இந்தியாவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்காக அலைக்கற்றை ஏலம் நடத்தப்பட்டது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்ற அந்த ஏலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அதிகமான ஏலத்தை கைப்பற்றின. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக 1000 நகரங்களில் 5G சேவையை வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
முன்னோட்டமாக 22 நகரங்களின் பெயரையும் வெளியிட்டுள்ளது ஜியோ . இந்த நகரங்களில் ஹீட் மேப்ஸ் , 3டி மேப்ஸ், கதிர்களை கண்டறியும் டெக்னாலஜி என பல்வேறு அம்சங்களை வழங்க இருக்கிறது ஜியோ 5G. முக்கியமாக வாடிக்கையாளர்களின் பயன்பாடு மற்றும் வருவாய் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஏலத்தில் கிட்டத்தட்ட 1.5லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் ஜியோதான் அதிகமான ஏலத்தை 88,078 கோடி செலவு செய்து பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ப்ரீமியம் 700MHz பேண்ட் ஜியோவிடம்தான் உள்ளது. மொத்தமாக 24,740MHz 5G அலைக்கற்றையை தன்வசப்படுத்தி வைத்துள்ளது ஜியோ. எனவே 700MHz, 800MHz, 1,800MHz, 3,300MHz, and 26GHz பேண்ட்களை ஜியோவால் பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே ஜியோவின் புதிய சேர்மன் ஆகாஷ் அம்பானி ஆகஸ்ட்டில் இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தை 5G சேவையோடு கொண்டாடுவோம் என்று பேசியிருந்தார். இந்நிலையில் அவர்களின் வருடாந்திர அறிக்கையில் 5G சேவைக்கான முதற்கட்ட திட்டமிடலை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு நடுவில் யார் முதலில் 5G சேவையை வழங்குவது என்ற போட்டி இருந்த நிலையில் தற்போது ஜியோ அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது.
முதற்கட்டமாக வரிசையில் உள்ள மும்பை,நவி மும்பை,ஜாம் நகர், ஹைதராபாத், லக்னோவுடன் சேர்த்து 9 நகரங்களில் சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 4G டேட்டா வேகத்தை விட பத்து மடங்கு அதிவேகமாக 5G சேவை இயங்கும்.அதற்கேற்றாற் போலவே அதன் மதிப்பும் 4G சேவை கட்டணத்தை விட 30% அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனமும் ஆகஸ்ட் மாதத்தில்தான் தங்களது 5G சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர். எனவே இரு நிறுவனங்களுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இன்னும் 5G சேவை அறிமுகமாவதற்கு முன்பே உலகளவில் 6G க்கான ஆராய்ச்சிகள் துவங்கிவிட்டன. பின்லாந்தை சேர்ந்த OULU பல்கலைக்கழகம் தான் இந்த ஆய்வை முதற்கட்டமாக செய்து கொண்டிருக்கிறது. அதனோடு கூட்டிணைந்து ஜியோவும் 6G க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வேகமே ஜியோவை டெலிகாம் துறையில் முதன்மை நிறுவனமாக வைத்துள்ளது.
– சுபாஷ் சந்திரபோஸ்