சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாகவும் இவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதேபோல, இன்னும் சிலரும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தொடருவதைத் தடுக்கும் வகையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்கும்படி பதிவுத் துறைக்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, தனது முன்பாக விசாரணையில் உள்ள அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாகப் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப். 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.