அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயா்நீதிமன்றத்தின் தனிநீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார். இந்த உத்தரவை எதிா்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான இறுதி விசாரணை இன்று நடந்தது. அப்போது, “இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்று, எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.மேலும், “பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு இறுதியானது, கட்சியினர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என கட்சி விதியில் கூறப்பட்டுள்ளது. அடிப்படைத் தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை’ என தனி நீதிபதி தீர்ப்பளித்திருப்பது தவறு.
இந்த காரணத்திற்காகவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்யலாம். கட்சி விதிகளை புறக்கணித்து தனி நீதிபதி தீர்ப்பளித்து இருக்கிறார். அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க அதிகாரம் இல்லை. அது பற்றி கட்சி விதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை” என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன் வைத்தது.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுக தான். அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்பதை ஏற்க முடியாது” என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தது. இருதரப்பு வாதத்தின் முடிவில் தற்போது வழக்கின் விசாரணையை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.