அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: கோவையில் பிரபல தனியார் நாளேடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும். தற்போது வெளியாகி உள்ள அந்த நாளேட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடைய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி அந்த கட்டுரையில், சில தலைப்புகள் அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. உதாரணமாக, சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம், அமைச்சர் பெயில் என உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அமைச்சர் குறித்து அவதூறு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அதனை படித்த கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளேட்டினை எரித்து இதற்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இந்த நாளேடுகளை கடைகளில் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பாபு,மாவட்ட பொறுப்பாளர் ராகுல்ராம்,செல்வம், பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாதாந்திர நாளேட்டில் வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் குறித்த இந்த சர்ச்சைக்குரிய தலைப்புகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது குறிப்பிடத்தக்கது.