சென்னை: “அரசு மருத்துவர்களுக்கான இடமாற்றம் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி கேட்டும், அரசாணை 354-ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வலியுறுத்தியும், வரும் செப்.28-ம் தேதி குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேர்மையாக நடைபெற்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், இது நேர்மையாக நடக்கவில்லை. இதனால், இந்த இடமாறுதல் கலந்தாய்வில், முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட 25 அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு உதவியுடன் கடந்த 22.6.22 அன்று அமைச்சரை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் தனது சிறப்பு உதவியாளர் மூலம் விசாரணை நடத்தியதில் 25 மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட துறையில் அதற்கான சிறப்பு படிப்பு படித்த வல்லுனர்கள் இருப்பதுதான் நியாயம். அப்போது தான் அந்த சிறப்பு மருத்துவரின் சேவை மக்களுக்கு கிடைக்கும். மேலும், அந்த மருத்துவருக்கும் துறை சார்ந்த அனுபவம் கிடைக்கும். ஆனால், சிறப்பு மருத்துவர்கள் இருந்தும், அவர்களை நியமிக்காமல் வேறு படிப்பு படித்த மருத்துவர்களை நியமிக்கிறார்கள். இது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளை அரசே மீறுவதாக உள்ளது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நியாயமற்ற செயலை அமைச்சரிடம் எடுத்துச் சென்றபோது தவறுகள் நிச்சயமாகக் களையப்பட்டு, தகுதியுள்ள சிறப்பு மருத்துவர்கள் உரிய இடத்தில் அமர்த்துவதாக சட்டப் போராட்டக் குழுவிடம் அமைச்சர் உறுதி அளித்திருந்தார். ஆனாலும், இன்று வரை தகுதி இல்லாதவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே குறிப்பிட்ட துறைகளில் உள்ள தகுதியில்லாத மருத்துவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மயக்க மருத்துவ துறையில் உள்ள ஆறு மருத்துவர்களைுடன் சேர்ந்து, சட்டப் போராட்டக் குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
அதுபோல, தர்மபுரியில் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான துறையில் நான்கு இடங்கள் உள்ளன. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. அந்த பணியில் இருக்கும் மூவருமே அந்த துறைக்கான தகுதி பெறாதவர்கள். அந்த ஒரு காலி இடத்திற்கு கூட அந்த மாவட்டத்தை சேர்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் உதயபாரதி வர விரும்பினார். ஆனால் காலியாக உள்ள அந்த இடத்தைக் கூட அவருக்குத் தர மறுத்து, அவரை வேலூருக்கு அனுப்பி விட்டனர். இதனால் தர்மபுரிக்கு வரும் அத்தனை தலைக்காயம் மற்றும் விபத்து நோயாளிகளையும் சேலத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் சேலம் செல்லும் வழியிலேயே பலர் இறந்து விடுகின்றனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலத் துறையில் கவுன்சிலிங் ஏதுமின்றி தற்போது மருத்துவர் ஒருவர் திடீரென்று எப்படி நியமிக்கப்பட்டார்? இது தொடர்பாக விதி முறைகளை அப்பட்டமாக மீறி உத்தரவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், முறைகேடாகப் பதவி உயர்வு பெற்ற மருத்துவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டது உண்மையெனில், காரணமானவர்கள் மீது உடனடியாக இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று 2019-இல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த மருத்துவர்களின் போராட்டத்தின் போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கை இன்றும் நிறைவேற்றப்படவில்லை. கலைஞரின் பெயரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வர், கலைஞர் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை 354-ஐ உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக நீதி வழங்கவும், அரசாணை 354-ஐ நடைமுறப்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் செப்டம்பர் 28-ம் தேதி சென்னையில் ‘குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்’ நடத்தவிருக்கிறோம்.
எனவே, இந்தப் போராட்டத்துக்கு முன்னதாகவே அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, மருத்துவர்களை இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழிவகை செய்ய வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.