காஞ்சிபுரம்: “ஒருபக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல் இரண்டையுமே சமமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை அழித்துதான் இன்னொன்றை நான் கொண்டு வருவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் பாமக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: “இது எந்த அடிப்படையில் இந்த இடத்தை தேர்வு செய்தார்கள் என்று எங்களுக்கும் தெரியாது. வெறும் அறிவிப்பு தான் வந்திருக்கிறது. இதுதொடர்பான நுட்பங்கள் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.
எந்தெந்த வழியில் எப்படி விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது, நீர்நிலைகளை என்ன செய்ய போகின்றனர், ஏரி குளங்களை என்ன செய்ய போகின்றனர் என்று தெரியவில்லை. மன்னர் காலத்தில் ஏரிகளை வெட்டினார்கள். அதனால்தான் காஞ்சிபுரமே ஏரிகளின் மாவட்டம்.
நமக்கு வளர்ச்சி தேவை. வளர்ச்சி என்பது ஒரு நவீன வளர்ச்சி.இந்த நவீன வளர்ச்சிக்குக் கட்டுமானங்கள் தேவை. அதே நேரத்தில் ஒன்றை அழித்து இன்னொன்று தேவையில்லை. ஒருபக்கம் வளர்ச்சி, மற்றொரு பக்கம் விவசாயம், வேளாண்மை, சுற்றுச்சூழல் இரண்டையுமே சமமாக எடுத்துச் செல்ல வேண்டும். ஒன்றை அழித்துதான் இன்னொன்றை நான் கொண்டு வருவேன் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டுமே சமமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.