புதுடெல்லி: இலங்கையின் அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்த சீன உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, ஒரு வாரத்துக்கு பிறகு கடந்த 22ம் தேதி புறப்பட்டு சென்றது. இது, இலங்கையில் இருந்தபோது தென் இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள், ஏவுகணைகள் இருப்பிடங்கள், அணுமின் நிலையங்களின் செயல்பாடுகளை உளவு பார்க்கும் என்று பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த கப்பலின் உளவு முயற்சியை இந்திய செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இந்திய பெருங்கடலில் வெளிநாட்டு ராணுவங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஜிசாட் – 7, ஜிசாட் 7ஏ ஆகிய ராணுவ பயன்பாட்டு செயற்கைக்கோள்களை இந்தியா பயன்படுத்துகிறது. இவை முறையே கடற்படை, விமானப்படைக்காக ஏவப்பட்டவை.
ஜிசாட் 7 செயற்கைக்கோள், 2013ம் ஆண்டு ஏவப்பட்டது. இது, ‘ருக்மணி’ என்று அழைக்கப்படுகிறது. இது, கடல் பகுதிகளை கண்காணிக்கிறது. ஜிசாட் 7ஏ எனப்படும் ‘அங்கிரி பேர்ட்’ 2018ம் ஆண்டு செலுத்தப்பட்டது. இது விமானப்படைக்கான பிரத்யேக செயற்கைக்கோளாகும். இது விமானம், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், வான்வெளியில் நுழையும் மர்ம பொருட்களை கண்காணிக்கிறது. இந்த 2 செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, மேலும் 2 செயற்கைக்கோள்கள் யுவான் வாங்கின் உளவு முயற்சிகளை முறிடியடித்துள்ளன.
சீன கப்பலை கண்காணிக்க, ரிசாட், எமிசாட் என்ற உளவு செயற்கைக்கோள்கள், ருக்மணி, அங்கிரி பேர்ட் செயற்கைக்கோள்களை இந்தியா பயன்படுத்தி உள்ளது. சீன கப்பலின் ஒவ்வொரு அசைவுகளையும் ருக்மணி கண்காணித்த நிலையில், எமிசாட் செயற்கைக்கோளில் உள்ள கெடில்லா மின்னணு நுண்ணறிவு தொகுப்பை பயன்படுத்தி, சீன கப்பலில் இருந்து வெளியான உளவு சிக்னல்கள் இடைமறித்து தடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட உளவு தகவல்களை சீன கப்பல் சேகரிப்பது தடுக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.