பொதுவாகவே நம் அனைவரிடமும் சிறு வயதில், `யாரையும் அடிக்கக் கூடாது, யாராக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும், சண்டைக்காரன் அடிபட்டுக் கிடந்தாலும் நமக்கென்னவென்று போகாமல் காப்பாற்ற வேண்டும்’ என்று நிறைய பேர் கூறியிருப்பார்கள். இதுவே நாம் வளர்ந்ததற்குப் பிறகு, அத்தகைய குணங்கள் பெரும்பாலான நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள் எனக் குறுகிய நெருங்கிய வட்டத்தை தாண்டி வெளிப்படுவதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களைக்கூட சூழ்நிலைகள்தான் முடிவுசெய்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான், தன்னுடைய நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பாகிஸ்தான் தீவிரவாதி எனத் தெரிந்தும், அவனும் மனிதன்தான் என அந்தக் காயம்பட்ட தீவிரவாதிக்கு ரத்தம் கொடுத்து, உணவு ஊட்டிய இந்திய ராணுவ வீரர்களின் செயல் பலரையும் நெகிழவைத்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், கடந்த 21-ம் தேதியன்று இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், தபாரக் ஹுசைன் என்ற பாகிஸ்தான் தீவிரவாதியொருவர் கைதுசெய்யப்பட்டார். இந்திய ராணுவ வீரர்களின் தாக்குதலில் காயமடைந்திருந்த தபாரக் ஹுசைன், ரஜோரியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான், உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த தபாரக் ஹுசைனுக்கு, இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பாட்டில்கள் ரத்தம் கொடுத்து, அவர்களின் கையாலேயே உணவும் ஊட்டியிருக்கின்றனர். இதை மருத்துவமனையின் கமாண்டன்ட் பிரிகேடியர் ராஜீவ் நாயரும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
முன்னதாக தீவிரவாதி தபாரக் ஹுசைன் குறித்து அதிகாரிகள் விசாரித்ததில், இந்திய ராணுவத்தின்மீது தாக்குதல் நடத்த தபாரக் ஹுசைன் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு, பாகிஸ்தான் உளவுத்துறை கர்னல் யூனுஸ் சவுத்ரி மூலம் பாகிஸ்தான் மதிப்பில் ரூ.30,000 கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் தபாரக் ஹுசைன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருக்கும் சப்ஸ்கோட் கிராமத்தில் வசிப்பவர் என்பதும் இந்த விசாரணையில் உறுதியாகியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், இவரின் இளைய சகோதரர் முகமது சயீத், கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் 16 அன்று ரஜோரியில் இந்திய ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.