என்னது 800 கோடிக்கு பேரமா? – ரொம்ப காஸ்ட்லியான லோட்டஸ் ஆபரேஷனா இருக்கும் போல!

எதிர்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் ஆளுங்கட்சியில் அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, அவர்களை தங்கள் பக்கம் இழுத்து, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசமாக்கும் ஆபரேஷன் லோட்டஸ் எனும் தந்திரம் பாஜகவுக்கு கைவந்த கலையாக இருந்து வருகிறது.

இந்த தந்திர வழியை பயன்படுத்தி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசை கவிழ்த்து, தங்களின் சொல் பேச்சை கேட்கும் அதே கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை அண்மையில் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து அழகுப் பார்த்து வருகிறது பாஜக.

மகாராஷ்டிராவில் ஆபரேஷன் லோட்டஸை கனகச்சிதமாக முடித்த கையோடு பீகாரிலும் இந்த ஆபரேஷனை அரங்கேற்ற முயன்றது பாஜக. ஆனால் நிதீஷ் குமாரிடம் இவர்களின் பாச்சா பலிக்காதையடுத்து, டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் பக்கம் திரும்பி உள்ளது பாஜக ராஜபார்வை.

அக்கட்சியின் துணை முதல்வராக உள்ள மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு, அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு என தலைநகரில் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பாஜக.

கட்சியை இரண்டாக உடைத்து அதிருப்தி எம்எல்ஏக்களுடன் வெளியேறினால், தன் மீதான எல்லா வழக்குகளையும் நீக்கிவிடுவதாகவும், எதிர்வரும் தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாகவும் பாஜக ஆசைக்காட்டி மிரட்டுவதாக மணீஷ் சிசோடியா சில தினங்களுக்கு முன் பாஜக மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் இன்று தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதை அடுத்து, உஷாரான கெஜ்ரிவால், தனது இல்லத்திலேயே ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார்.

கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசியதால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி உள்ள அவர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மொத்தம் 40 பேரை தலா 20 கோடி வீதம் 800 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இவ்வளவு கோடி பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? என காட்டமாக கேள்வியும் கெஜ்ரிவால் எழுப்பி உள்ளார்.

அவரது இந்த கேள்வி ஒருபுறம் இருக்க, இவ்வளவு காஸ்ட்லியான லோட்டஸ் ஆபரேஷனை பாஜக நிகழ்த்த வேண்டிய அவசியம் என்ன, அதுவும் ஆம் ஆத்மிக்கு எதிராக? என்ற கேள்வியும் மறுபுறம் எழுந்துள்ளது.

டெல்லியில் ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி அடுத்து பஞ்சாப்பை கைப்பற்றியுள்ளது. கோவாவில் அதற்கு மாநில கட்சிக்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் விரைவில் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் அங்கு களம் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி.

பிரதமர் மோடி, பாஜக முன்னாள் தலைவரும், இன்னாள் மத்திய அமைச்சருமான அமித் ஷா ஆகியோரின் சொந்த கோட்டையாான குஜராத்தில் வாக்காளர்களை கவர பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால் அவரின் வாக்குறுதியில் குஜராத் மக்கள் ஏங்கே மயங்கி போய்விடுவார்களோ என்று யோசித்த பாஜக, டெல்லியை தாண்டி ஆம் ஆத்மியை வளர்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அக்கட்சியின் முக்கிய தலைவர் மீது ஊழல சேற்றை வாரி பூசியுள்ளது.

மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவால் தவிடு பொடி ஆக்குவாரா, இல்லையா என்பதில்தான் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இருந்து தோன்றிய ஆம் ஆத்மியின் அரசியல் எதிர்காலமே உள்ளது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.