புதுடெல்லி: ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த ‘பெகசாஸ்’ உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் குழு ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், அந்தக் குழுவின் அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், “விசாரணை அறிக்கை மூன்று பாகங்களாக உள்ளன. சில பாகங்கள் மிகவும் ரகசியமானவை. அதில் சில தனிநபர் தகவலும் இடம்பெற்றிருக்கலாம். ஆகையால், பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்ப நிபுணர் குழுவின் அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட முடியாது. உளவு மென்பொருள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 29 தொலைபேசிகளில் 5-ல் மட்டுமே உளவு மென்பொருள் இருந்தது. ஆனால், அவையும் பெகாசஸ் உளவு மென்பொருள் தானா என்பது உறுதியாகவில்லை” என்றார்.
அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு கூறியதைப் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி கண்டனத்தை தெரிவித்தார். “இங்கே எப்படி ஒத்துழைக்கவில்லையோ அதேபோல் அங்கே விசாரணை ஆணையத்திலும் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை போல” என்றார். அதற்கு அரசு தரப்பு சொலிசிட்டர் ஜெனரல், அது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.