பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கமிஷன் விவகாரம்
ஆட்சியாளர்கள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்துவதாக அரசு சொல்கிறது. விசாரணை நடத்தினால் ஆவணங்களை கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு பேசுவதால் எதுவும் நடைபெறாது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இத்தகைய கமிஷன் விவகாரம் இருக்கவில்லை.
நான் லாட்டரியை ரத்து செய்தபோது பலர் எனக்கு பணம் கொடுக்க முன்வந்தனர். அவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு லாட்டரியை ரத்து செய்தேன். அவ்வாறு இந்த அரசு செயல்படுமா?. எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியிலும் கமிஷன் விவகாரம் இருந்தது. ஆனால் எனது அலுவலகத்தில் அது நடக்கவில்லை.
யாருக்கும் தகுதி இல்லை
ஊழல் செய்த அதிகாரிகளில் எத்தனை பேரை இந்த அரசு சிறைக்கு அனுப்பியுள்ளது. கமிஷன் விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் எதுவும் நடைபெற்றுவிடாது. ஒப்பந்ததாரர்கள் ஓராண்டு அரசு திட்ட பணிகளை நிறுத்தினால் எல்லாம் தானாக சரியாகிவிடும். முனிரத்னா என்னென்ன செய்துள்ளார் என்பது எனக்கு தெரியும். கமிஷன் விவகாரம் குறித்து பேச பிரதமர் மோடி உள்பட யாருக்கும் தகுதி இல்லை. ஈத்கா மைதான விவகாரத்தில் ஐகோர்ட்டின் உத்தரவை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் மூலம் பெங்களூருவில் அமைதி நிலவ வேண்டும். இத்தகைய சர்ச்சைக்குரிய விவகாரங்கள் எழுவதால் அரசின் தவறுகள் மூடி மறைக்கப்படுகின்றன.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.