ஆரல்வாய்மொழி: கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு பெற்றதாகும். கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலங்கள் என்று ஓணம் பண்டிகை களைகட்டும். இந்தாண்டு ஓணம் பண்டிகையானது வரும் 31ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஓணத்தில் மிகவும் சிறப்பு பெற்றது அத்தப்பூ கோலம். இதற்கு பூக்கள் தான் பிரதானம். இதற்கான மலர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு முழுவதுமாக கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காரணமாக தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து ஓணத்திற்கு கேரளாவுக்கு செல்லும் பூக்கள் விற்பனை தடைபட்டது.
அந்த சமயத்தில் கேரளாவில் கொரோனாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இங்கிருந்து பூக்கள் செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. சிறப்பு அனுமதி பெற்று சென்றும் கேரளாவில் மக்கள் கூட தடை விதிப்பு காரணமாக பூக்கள் விற்பனையாகாமல் திரும்பியது. இதனால் டன் கணக்கில் பூக்கள் அழுகி நாசமானது. இதனால் தோவாளை பூ வியாபாரிகள், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் ஓணம் பண்டிகைக்காக கேரளாவுக்கு ேதாவாளையில் இருந்து பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் 50டன், 100 டன் அளவில் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகின. இதனால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த முறை கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டதால் ஓணம் பண்டிகைக்கான பூக்கள் ஆர்டர் இப்போதே தொடங்கி விட்டது. கேரளா வியாபாரிகள் போன் மூலம் தோவாளை பூ வியாபாரிகளை தொடர்பு கொண்டு ஆர்டர்களை புக் செய்து வருகின்றனர். தற்போது வரை 100 டன் வரை பூக்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். எனவே இந்த வருடம் ஓணத்திற்கு கொரோனாவுக்கு முன்பிருந்தது போல் 200 டன் முதல் 250 டன் வரை கேரளாவுக்கு பூக்கள் விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தோவாளை பூ மார்க்கெட் மொத்த வியாபாரி கிருஷ்ண குமார் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கேரள எல்லையில் கடும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓணம் பண்டிகை பூக்கள் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்தனர்.
அதன்பின் 2021ல் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் கேரளாவுக்கு செல்லும் பூக்கள் விற்பனை அதிகரித்தது. 50 டன் முதல் 60 டன் வரை விற்பனையாகின. ஆனால் இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு அப்போதே கேரளா வியாபாரிகள் பூக்கள் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். எனவே கேரளாவுக்கு இந்த முறை 200 டன் முதல் 250 டன் வரை பூக்கள் விற்பனைக்கு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் வியாபாரிகளாகிய நாங்கள் மட்டுல்ல விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.