ரோம்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர் ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு நபர் 3 வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறை என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலியை சேர்ந்தவர் 36 வயது நபர். இவர் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் ஜூன் 20 வரை ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 5 நாள் பயணத்தை முடித்துவிட்டு அவர் மீண்டும் இத்தாலி திரும்பினார்.
இந்நிலையில் வீடு திரும்பிய அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.அதாவது காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை வலி உள்பட பல்வேறு பிரச்சனைகளை அவர் எதிர்கொண்டார்.
கொரோனா உறுதி
இதனால் அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். ஜூலை 2ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமையில் சிகிச்சை பெற துவங்கினார். இதற்கிடையே அநன்று மதியம் அவரது இடது கையில் அரிப்பு ஏற்பட்டது. மேலும் அவரது மூட்டு, முகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றின. கொப்பளங்கள் உருவாகின. இது தொடர்ந்து உடலின் பல இடங்களுக்கும் பரவியது.
குரங்குஅம்மை-எச்ஐவி பாசிட்டிவ்
ஜூலை 5ம் தேதி கொப்பளங்கள் உடைய துவங்கின. இதனால் பயந்துபோன அவர் இத்தாலி கேடானியில் உள்ள சான் மார்கோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்தார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு குரங்கு அம்மை, எச்ஐவி உள்பட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் முடிவுகள் வெளியாகின. அந்த நபருக்கு கொரோனா உள்ள நிலையில் எச்ஐவி மற்றும் குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியானது. கடைசியாக செப்டம்பர் மாதம் 2021ல் அவர் எச்ஐவி சோதனை செய்தபோது நெகட்டிவ் வந்த நிலையில் தற்போது பாசிட்டிவ் என வந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
ஓரினச்சேர்க்கையால்…
இதுபற்றி டாக்டர்கள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற 5 நாளில் பல்வேறு ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன்மூலம் அவருக்கு எச்ஐவி மற்றும் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
உலகில் முதல் முறையாக
இந்நிலையில் தான் அந்த நபர் கொரோனா மற்றும் குரங்கு அம்மையில் இருந்து மீண்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜூலை 11ல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் தனிமையில் உள்ளார். உலகின் பல நாடுகளில் தற்போது கொரோனா, குரங்கு அம்மை நோய் பரவல் உள்ளது. இருப்பினும் ஒரேநேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி நோயால் யாரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லாத நிலையில் முதல் முதலாக இந்த இத்தாலி நபர் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் தொடர் சிகிச்சையில் இருந்து அவர் கொரோனா, குரங்கு அம்மையால் மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.