டெல்லி: கடவுள்கள் யாரும் உயர் ஜாதியில் இருந்து வரவில்லை என்று தான் கூறியதை சிலர் திட்டமிட்டு அரசியலாக்குவதாக ஜே.என்.யு. பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நடத்திய நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பாலின நீதி தொடர்பான தலைப்பில் ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் உரையாற்றினார். அம்பேத்கரின் ஆய்வுகளை மேற்கோள்காட்டி பேசிய அவர், பெண்கள் அனைவருமே சூத்திரர்கள், பெண்களுக்கு ஜாதியே கிடையாது என்று மனுசாஸ்திரம் சொல்கிறது என்றார்.
திருமணத்திற்கு முன்பு தந்தையின் ஜாதியும், திருமணத்திற்கு பின்பு கணவன் ஜாதியும் பெண்களுக்கு ஒட்டிக்கொள்கிறது என்றும் சாந்திஸ்ரீ கூறினார். அதேபோல கடவுள்களில் யாரும் பிராமணர்கள் இல்லை. சிவபெருமான் பட்டியல் அல்லது பழங்குடியினர் சமூகத்தினராக இருப்பார் என்று அவர் கூறினார். லட்சுமி, சக்தி, ஜெகந்நாதர் உள்ளிட்ட தெய்வங்களும் உயர் ஜாதியில் இருந்து வரவில்லை. எனவே உயந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டை இன்னமும் கடைபிடிப்பது மனிதாபிமானமற்றது என்று சாந்திஸ்ரீ கூறினார். நவீன இந்தியாவில் வேறு எந்த தலைவர்களிடம் அம்பேத்கர் அளவிற்கு சிறந்த சிந்தனைகள் இல்லை. அவர்களுடைய சிந்தனைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் பேசினார்.
சாந்திஸ்ரீயின் கருத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் சாந்திஸ்ரீ, அம்பேத்கரின் ஆய்வுக்கருத்துக்களை மட்டுமே தான் பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார். கல்விசார் விரிவுரை ஏன் அரசியலாக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், அந்த கருத்துக்காக தன் மீதோ, அம்பேத்கர் மீதோ யாரும் கோவப்படுவது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார். தனக்கு வரும் மிரட்டல்கள் இனி விரிவுரை வழங்கவே அச்சத்தை தருவதாகவும், மிகவும் வருத்தப்படுவதாகவும் சாந்திஸ்ரீ கூறியிருக்கிறார்.