மதுரை: கல்லூரி மாணவர்கள் இடையே ஆயுதக் கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என டிஜிபி வனிதா எச்சரித்துள்ளார்.
மதுரை ரயில்வே காவல் உட்கோட்டத்தில் வேலை பளு காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குதல், பொதுமக்களை எவ்வாறு அணுகுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் மதுரை ரயில்வே கோட்ட அலுவலக பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. ரயில்வே இருப்புப் பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா தலைமை வகித்தார். ரயில்வே காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மதுரை உட்கோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் இதில் பங்கேற்றனர். உளவியல் மருத்துவர் ஸ்ரீதேவி கண்ணன், ரயில்வே ஆய்வாளர் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி வனிதா பேசியதாவது: கஞ்சா புழக்கத்தை தடுக்க ‘ஆப்ரேஷன் கஞ்சா ’என்ற நடவடிக்கையால் கஞ்சா கடத்தல் பெரியளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் இருந்து கடத்திய சுமார் 1,000 கிலோவுக்கு அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்கள் பற்றாகுறையை கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்புப்படையுடன், இருப்புப்பாதை போலீஸார் இணைந்து பணிபுரிகின்றனர்.
இதன்மூலம் வேலைப் பளு குறைக்கப்படுகிறது. மன நிறைவுடன் காவலர்கள் பணியாற்ற இது போன்ற ஆலோசனைகள், பயிற்சி பட்டறைகளை நடத்துகிறோம். மகளிர் போலீஸார் மூலம் பெண்களுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
‘ரூட்டு தல’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களில் அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை பயன்படுத்தியதாக இதுவரையிலும் 27 பேரை கைது செய்துள்ளோம். கல்லூரி மாணவர்களிடையே ஆயுத கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இது தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ரயில்வே துறை மூலம் இதுவரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் 6 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு அவர் கூறினார்.