குஜராத் சட்டமன்ற தேர்தல்: செப்டம்பர் 5ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார்…

அகமதாபாத்:  குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி  செப்டம்பர் 5ந்தேதி தனது  முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் செப்டம்பர் 15ந்தேதிக்குள் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜகவுக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. பொதுமக்களுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு அறிவிப்புகளை கெஜ்ரிவால் வெளியிட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் பிரசாரத்தை செப்டம்பர் 5ம் தேதி ராகுல் காந்தி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ”சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை ராகுல் வரும் செப்டம்பர் 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்” என்றார்.

குமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ பாத யாத்திரையை செப்டம்பர் 7ம் தேதி ராகுல் தொடங்க  உள்ள நிலையில் அதற்கு 2 நாள் முன்னதாக அகமதாபாத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பாஜவின் கோட்டையான குஜராத்தில் அக்கட்சி சுமார் 30 ஆண்டாக ஆட்சி நடத்தி வருகிறது. இம்முறை, பாஜ, காங்கிரஸ் மட்டுமின்றி ஆம் ஆத்மியும் குஜராத்தில் போட்டியிட உள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மி, 2 கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு போட்டி கடுமையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.