பாரத மாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கத்திற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பாப்பாரப்பட்டி போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் தமக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தாம் எந்த தவறும் செய்யாத நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, கே.பி. ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும், உடல் நலக்குறைவு எதுவும் ஏற்பட்டால் பென்னகரம் மேஜிஸ்ட்ரேட்டை அணுகி நிபந்தனையில் விலக்கு பெறலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.