மதுரை: கொடைக்கானல் ஏரிப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கொடைக்கானலைச் சேர்ந்த ஆறுமுகவேலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் உள்ளது. கொடைக்கானல் ஏரிப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏரியை சுற்றி 200 மீட்டருக்குள் எவ்வித கட்டிடங்களும் கட்டக் கூடாது. இப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விதிமுறையை மீறி கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம் ஆகும். இதனால் கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், கட்டுமான உபகரணங்களை அங்கிருந்து அகற்றவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொடைக்கானல் நகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், வழக்கறிஞர் டி.எஸ்.முகமதுமுகைதீன் ஆகியோர் வாதிடுகையில், ”கொடைக்கானல் ஏரியில் வேலி அமைக்கப்படுகிறது. பாடசாலை, நடைபாதை அமைக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்காக 2 கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. ஏரி நீரை பயோ மெட்ரிக் முறையில் சுத்தம் செய்ய நீரூற்று மற்றும் அதற்கு தேவையான இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன.
இப்பணிகள் அனைத்தும் ஏரி மற்றும் ஏரி அமைந்திருக்கும் பகுதியை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது. கொடைக்கானல் ஏரி சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் போட் கிளப் உரிமையாளர்களின் தூண்டுதல் பேரில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்” என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், ”இந்த மனுவில் உத்தரவு பிறப்பிக்க முகாந்திரம் இல்லை. கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு தடையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.